
8th pay commission News Tamil
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உயரவுறுவதற்கான வழிவகுக்கும் வகையில், 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தற்போது அமலில் உள்ள 7-வது ஊதியக் குழுவின் பணிக்காலம் 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய ஊதியக் குழுவின் அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8-வது ஊதியக் குழு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pay Commission: ஊதியக் குழு என்பது அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் பிற நலன்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை பெரிதும் பாதிக்கும்.
8-வது ஊதியக் குழுவின் அமலாக்கத்தை மேற்பார்வையிட தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை ஏற்படுத்தும். மேலும், அகவிலைப்படியும் (DA) உயர்த்தப்படும். ஓய்வூதியம் பெறுவோருக்கும் பல்வேறு கொடுப்பனவுகளில் திருத்தம் செய்யப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த முடிவு, வரும் 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.