
காங்கோ நாட்டில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. கோமா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பியோடிய நிகழ்வு சாதாரண தப்பித்தல் முயற்சியாக மட்டும் முடியாமல், மனித மனசாட்சியையே உறைய வைக்கும் வன்மத்தை வெளிக்காட்டியுள்ளது. சுமார் 4,000 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், அந்த சிறைச்சாலையில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்23 தீவிரவாத குழு கோமா நகரை கைப்பற்றிய சூழலில், ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி கோமா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஆண் கைதிகள் தப்பி ஓடினர்.
ஆனால் தப்பிக்கும் முன், அவர்கள் செய்த செயல் நாகரீக சமூகத்தையே தலைகுனிய வைத்துவிட்டது. ஆண்கள் சிறைப்பகுதியை விட்டு வெளியேறும் முன், பெண்கள் சிறைப்பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த பெண் கைதிகளை சிறைக்குள்ளேயே தீ வைத்து எரித்துக் கொன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
160க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர், ஒரு சில பெண்கள் மட்டுமே உயிருடன் தப்பியுள்ளனர். அவர்களும் சொல்லொண்ணா துயரத்தையும் வடுக்களையும் சுமந்து நிற்கின்றனர்.
சிறையில் காவலர்கள் அடித்து கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த சிறைச்சாலை கைதிகள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வெறியாட்டத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் யார், பின்னணி என்ன என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தெற்கு கிவு பகுதியில் காங்கோ ராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஐ.நா விசாரணை நடத்தி வருகிறது.
இந்த கொடூர சம்பவம் காங்கோ நாட்டில் நிலவும் வன்முறை கலாச்சாரத்தின் உச்சகட்டத்தை காட்டுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மனித உரிமைகள் முற்றிலும் மீறப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.