
கடந்த 6ம் தேதி கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயில், அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு சாட்சியாக மாறியது. ஹேமராஜ் என்ற கொடிய மனம் படைத்த நபர், ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கருணை என்பதே இல்லாமல் அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளான்.
கர்ப்பிணி என மன்றாடி கதறிய பெண்ணின் பரிதாப குரலை சற்றும் பொருட்படுத்தாமல், மிருகத்தனமாக நடந்து கொண்ட ஹேமராஜ், அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளினான். இந்த கொடூர சம்பவத்தில், அந்த பெண்ணிற்கு கை, கால்களில் எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், வயிற்றில் இருந்த 4 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்தது.
மருத்துவர்கள் போராடியும், வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றவாளி ஹேமராஜ் கைது செய்யப்பட்டு, காலில் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், குற்றவாளியை சும்மா விடக்கூடாது என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருப்பது காண்போரை கலங்கச் செய்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடும் இந்த காலத்தில், கர்ப்பிணி என்றும் பாராமல் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் மனித மனசாட்சியை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது. இத்தகைய மிருகத்தனமான செயல்களை சமூகம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.