
வேலைக்கு நேரமாகிவிட்டது என்றாலே பலருக்கும் இதய துடிப்பு எகிறிவிடும். குறிப்பாக காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் பலரும் டென்ஷனாகவே இருப்பதை பார்க்க முடியும். சீனாவில் நடந்த ஒரு சம்பவம், இந்த மன அழுத்தமான வேலை கலாச்சாரத்தின் உச்சத்தை நமக்கு உணர்த்துகிறது. நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வேலைக்கு செல்லும் அவசரத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு மருத்துவ உதவிக்கு அழைத்தனர். மருத்துவர்கள் போராடி அவரை மீட்டெடுத்த நிலையில், அவர் மயக்கம் தெளிந்து சொன்ன முதல் வார்த்தை பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
பிப்ரவரி மாதம் 4-ம் தேதி சீனாவில் உள்ள சாங்ஷா ரயில் நிலையத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நபர் ரயிலில் ஏறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார். உடனடியாக ரயில் நிலைய ஊழியர்களும், மருத்துவர்களும் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி செய்தனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு, மருத்துவர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்து அவரை மீட்டனர்.
ஆனால், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மயக்கம் தெளிந்ததும் அந்த நபர் சொன்ன வார்த்தைதான். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்த அவர், “ஐயோ… அதிவேக ரயிலை பிடித்து நான் வேலைக்கு போக வேண்டுமே” என்று பதறியுள்ளார். அதுமட்டுமின்றி, இது சாதாரண மயக்கம் தான், மருத்துவமனைக்கு எல்லாம் செல்ல மாட்டேன் என்றும் பிடிவாதமாக கூறியிருக்கிறார். அவரது உடல்நிலையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள், அவரை மருத்துவமனைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். முதலில் மறுத்தாலும், பின்னர் தனது நிலையை உணர்ந்து ஆம்புலன்ஸில் செல்ல ஒப்புக்கொண்டார்.
இந்த செய்தி சீன ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த சம்பவத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருபுறம் பணம் முக்கியம் தான் என்றாலும், உயிரை பணயம் வைத்து வேலை செய்யக்கூடாது என அறிவுரை கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இது சீனாவில் மட்டுமல்ல, பலரின் நிலைமை இதுதான். வேலைக்கு செல்லாவிட்டால் வாழ்க்கை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்த நிலையில் இருப்பதால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும், இது போன்ற மன அழுத்தமான வேலை கலாச்சாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இது சீனாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பலருடைய நிதர்சனமான உண்மை நிலை இதுதான்.
இந்த சம்பவம், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. வேலையை விட உயிர் மேலானது என்பதை அனைவரும் உணர வேண்டும். உடல்நலத்தை புறக்கணித்துவிட்டு வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இறுதியில் ஆபத்தையே விளைவிக்கும் என்பதை இந்த சம்பவம் நமக்கு எச்சரிக்கிறது.