
இந்திய மண்ணின் நெல்லூர் இன மாடு ஒன்று, சுமார் 40 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி, உலக கால்நடை வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நம்ம ஊர் மாடுகளின் அருமை தெரியாமல், வெளிநாட்டு மாடுகளை நோக்கி படையெடுக்கும் நமக்கு, இந்த சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராஸ் நகரில் நடந்த கால்நடை ஏலத்தில், வயட்டினா-19 என்ற பெயரிடப்பட்ட நெல்லூர் பசு மாடு, 4.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய்! இந்த பிரம்மாண்ட விற்பனை, உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட கால்நடை என்ற கின்னஸ் உலக சாதனையை தட்டிச் சென்றுள்ளது. சராசரி நெல்லூர் மாடுகளைவிட இரண்டு மடங்கு அதிக எடையுடன், 1101 கிலோ எடையுடன் கம்பீரமாக காட்சி தரும் இந்த மாடு, அழகிலும் சளைத்ததல்ல. வெள்ளை பட்டு போன்ற ரோமங்கள், பளபளக்கும் தேகம் என பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றத்துடன், பசுக்களுக்கான மிஸ் சவுத் அமெரிக்கா அழகி பட்டத்தையும் வென்றுள்ளது.
இந்த நெல்லூர் மாடுகளுக்கு ஏன் இவ்வளவு மவுசு? காரணம், இவை வெப்ப மண்டல சூழ்நிலைக்கு ஏற்றவை. வெப்பம் அதிகமாக உள்ள பிரேசில் போன்ற நாடுகளில் இந்த மாடுகள் சிறப்பாக வளரும். அதுமட்டுமின்றி, மற்ற மாடுகளை போல் நோய்கள் எளிதில் தாக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை. அதனால் தான், வெளிநாட்டினர் இந்த மாடுகளை விரும்பி வாங்கி வளர்க்கின்றனர். பிரபல கால்நடை மருத்துவர் ஒருவர், “வயட்டினா -19 போன்ற பசுவை பார்ப்பது அரிது. இது ஒரு முழுமையான மாடு” என்று புகழ்ந்துரைத்துள்ளார்.
இந்தியாவில் தோன்றிய நெல்லூர் மாடுகள் இன்று பிரேசில் நாட்டில் கொடி கட்டி பறக்கின்றன. பிரேசில் நாட்டில் வளர்க்கப்படும் பசுக்களில் 80 சதவீதத்திற்கும் மேல் இந்திய ரக மாடுகள் தான் என்பது ஆச்சரியமான உண்மை. பிரேசில் மட்டுமின்றி, அண்டை நாடுகளிலும் இந்த மாடுகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். 1800 களில் இந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த மாடுகள், இன்று அங்கு இறைச்சி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த 40 கோடி ரூபாய் சாதனை விற்பனை, நமது நாட்டு மாடுகளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் ஒரு பொன்னான தருணம். நமது பாரம்பரிய கால்நடைகளை நாம் சரியாக பராமரித்து, அவற்றின் மதிப்பை உணர்ந்தால், உலக அரங்கில் நாமும் கால்நடை துறையில் ஜொலிக்க முடியும் என்பதற்கு இந்த நெல்லூர் மாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.