
இந்தியாவை “புதையல்களின் பூமி” என்று அழைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பல நூற்றாண்டுகளாக, வலிமைமிக்க பேரரசர்களும், அளவற்ற செல்வம் படைத்த மன்னர்களும் இங்கு ஆட்சி செய்துள்ளனர். தங்களது செல்வத்தை எதிர்கால சந்ததிக்காக விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைத்த பல மன்னர்கள், அதனைப் புதையல்களாகப் பூமிக்குள் மறைத்து வைத்த கதைகள் ஏராளம்.
காலங்கள் கடந்தும், பல புதையல்கள் வெளி உலகிற்கு வந்தாலும், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருக்கும் புதையல்கள் இந்திய மண்ணில் ஏராளம். அப்படிப்பட்ட மர்மம் நிறைந்த புதையல்களில் ஒன்றுதான் பிம்பிசாரரின் புதையல். பல நூற்றாண்டுகளாகப் புதையல் வேட்டைக்காரர்களை ஈர்த்து வரும் இந்த புதையல், இன்று வரை மர்மம் விலகாமலேயே நீடிக்கிறது.
பிம்பிசாரர் புதையல் பீகார் மாநிலத்தில் ராஜ்கீர் அருகே உள்ள சோன்பந்தர் குகைகளில் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. உள்ளூர் கதைகளின் படி, மகத நாட்டை ஆண்ட மன்னர் பிம்பிசாரர், அளவற்ற செல்வம் வைத்திருந்தார். அவர் பௌத்த மதத்திற்கு மாறிய பிறகு, தனது செல்வத்தை ஏழைகளுக்கு வாரி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட அவரது மகன் அஜாதசத்ரு, தந்தையைக் கொன்றுவிட்டு செல்வத்தைக் கைப்பற்ற நினைத்தார்.
ஆனால், ராணி சாதுர்யமாக பிம்பிசாரர் சேகரித்த பொன், பொருள் மற்றும் தனது நகைகளையும் வைர தேவன் என்ற சமணத் துறவியிடம் கொடுத்து, குகையில் ரகசியமாக மறைத்து, மந்திரப் பூட்டு போட்டு மூடிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த குகை ராஜ்கீரில் உள்ள வைபர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
பிம்பிசாரர் புதையலைத் தேடி பல நூற்றாண்டுகளாகப் பலர் முயற்சி செய்தும் பலனில்லை. ஏன், ஆங்கிலேயர்கள் கூட வெடி வைத்து குகையைத் தகர்க்க முயன்றும் உள்ளே செல்ல முடியவில்லை. குகை வாசலில் உள்ள ஒரு கல்வெட்டில் புதையலை எடுப்பதற்கான ரகசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை அந்த கல்வெட்டு யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. பிம்பிசாரருக்கு மட்டுமே குகையைத் திறக்கும் வழி தெரிந்திருந்ததாகவும், அந்த ரகசியத்தை அவர் தன்னோடு மண்ணுக்குள் கொண்டு சென்று விட்டதாகவும் நம்பப்படுகிறது.
தொல்பொருள் ஆய்வாளர்கள் சோன்பந்தர் குகைகள் மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், இந்தியாவில் பாறையில் வெட்டப்பட்ட குகைகளில் இதுவே கடைசியானது என்றும் கூறுகின்றனர். ஒருவேளை, காலப்போக்கில் குகையின் ரகசியம் வெளிப்படலாம். அப்படி ஒரு நாள் இந்த குகை திறக்கப்பட்டால், அது மிகப்பெரிய பொக்கிஷத்தை வெளிக்கொணரும் என்பதில் சந்தேகமில்லை. பிம்பிசாரரின் புதையல், இந்திய மண்ணின் மர்மமான பொக்கிஷங்களில் ஒன்றாக, புதையல் வேட்டைக்காரர்களின் கனவாக இன்றும் நீடிக்கிறது.