
சமீப காலமாக கிரிப்டோகரன்சி உலகில் பல புதுமைகள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் பை நெட்வொர்க் என்னும் டிஜிட்டல் நாணயம் ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி நகர்கிறது. இது பல ஆண்டுகளாக ஒரு தனித்துவமான இடத்தில் இருந்து வந்தது. அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தாலும், வெளிப்புற பயன்பாடுகள் குறைவாகவே இருந்தன. சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் இதன் மொபைல் செயலி மூலம் கிரிப்டோக்களை ‘மைனிங்’ செய்து வந்தனர். ஆனால், இது ஒரு மூடிய வட்டத்திற்குள்ளேயே இயங்கி வந்தது. மற்ற பிளாக்செயின்களுடனோ, வழக்கமான பணப் பரிவர்த்தனைகளுடனோ இணையாமல் தனித்தே செயல்பட்டது.
ஆனால், பிப்ரவரி 20, 2025 முதல் நிலைமை மாறப்போகிறது. பை நெட்வொர்க் “திறந்த நெட்வொர்க்” நிலைக்கு மாறுகிறது. இது ஒரு பெரிய திருப்புமுனை. இதுவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இயங்கிய பை நெட்வொர்க், இனி முழுமையான பிளாக்செயினாக மாறவுள்ளது. இதன் மூலம், பிற நிறுவனங்களின் செயலிகள், வணிக இணைப்புகள் மற்றும் பல்வேறு பிளாக்செயின்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு உருவாகும். எல்லோரும் எளிதாக அணுகும் கிரிப்டோகரன்சி என்பதைத் தாண்டி, நம்பகமான மற்றும் பயனுள்ள டிஜிட்டல் நாணயமாக தன்னை நிலைநிறுத்த பை நெட்வொர்க் முயற்சி செய்கிறது.
பை நெட்வொர்க்கின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கிய காரணம், அதன் எளிமை. மற்ற கிரிப்டோக்களைப் போல இல்லாமல், அதிக செலவு பிடிக்கும் கருவிகள் அல்லது தொழில்நுட்ப அறிவு இல்லாமல், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம் என்ற நிலை இருந்தது. இது அதிகமான பயனர்களை ஈர்த்தாலும், மூடிய சூழலில் இதன் வளர்ச்சிக்கு சில தடைகள் இருந்தன. தற்போது, பிளாக்செயினைத் திறப்பதன் மூலம், தற்போதுள்ள பயனர்கள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைப்பார்கள் என பை நெட்வொர்க் நம்புகிறது.
மற்ற கிரிப்டோக்களில் அனானிமஸ் தன்மை முக்கியமாக இருக்கும்போது, பை நெட்வொர்க் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இங்கு நடக்கும் பரிவர்த்தனைகள் அடையாளத்தை உறுதி செய்த தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கிடையே நடைபெறுகின்றன. இது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு இணக்கத்தை அதிகரிக்கிறது. அரசாங்கங்களின் கிரிப்டோ மீதான கவலைகளை இது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பயன்பாட்டை நிரூபிக்க, சமீபத்தில் “பைஃபெஸ்ட் 2024” என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் 9.5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், 27 ஆயிரம் விற்பனையாளர்கள் மற்றும் 28 ஆயிரம் வணிகர்கள் 160 நாடுகளில் பங்கேற்றனர். இது, பை நெட்வொர்க் உண்மையான பரிவர்த்தனை ஊடகமாகவும் செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது.
தற்போதுள்ள பயனர்கள் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு பை நாணயத்தை பயன்படுத்த தயாராக இருப்பது தெளிவாகிறது. ஆனால், முக்கிய கேள்வி என்னவென்றால், பை நெட்வொர்க் வட்டத்திற்கு வெளியே உள்ள வணிகங்கள் இதை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்களா என்பதுதான். திறந்த நெட்வொர்க், பை நெட்வொர்க் பரந்த நிதி அமைப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்குமா என்பதை நிரூபிக்க கிடைத்த முதல் வாய்ப்பு. கடந்த ஆறு வருடங்களாக அடித்தளம் அமைத்த பை நெட்வொர்க், இனி திறந்த சந்தையில் தன்னை நிலைநிறுத்த வேண்டிய நேரம் இது.
அணுகக்கூடிய மற்றும் நம்பகமான பிளாக்செயின் பெரிய அளவில் செயல்பட முடியும் என்பதை பை நெட்வொர்க் நிரூபித்தால், கிரிப்டோ பயன்பாடு குறித்த பொதுவான கருத்தை அது மாற்றக்கூடும். இந்த புதிய முயற்சி, கிரிப்டோ உலகில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பரிசோதனை காலம் முடிந்தது, பை நெட்வொர்க் தனது சொந்த காலில் நிற்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.