
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சமீபத்தில் பூமிக்குத் திரும்பியது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆராய்ச்சிப் பணிக்காக சென்றிருந்த அவர், எதிர்பாராத விதமாக விண்கலத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் ஒன்பது மாதங்கள் விண்வெளியிலேயே தங்கிவிட்டார். அவருடன் சென்றிருந்த மற்றொரு வீரரும் இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டார். திட்டமிட்டதை விட மிக நீண்ட காலம் விண்வெளியில் சிக்கியிருந்த அவர்களின் பொறுமைக்கும் மன உறுதிக்கும் கிடைத்த பரிசாக இந்த வெற்றிகரமான மீட்பு அமைந்தது.
விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவது நாசாவிற்கு எப்போதும் ஒரு முக்கியமான சவாலாக இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்துக்களை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மீட்பு நடவடிக்கையும் மிக கவனமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த முறை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸையும் அவரது குழுவினரையும் அமெரிக்காவின் ஃப்ளோரிடா கடற்கரையில் பத்திரமாக தரையிறக்கினர். அவர்கள் வந்திறங்கியபோது, அவர்களை வரவேற்கும் விதமாக டால்பின்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது ஒரு அழகான காட்சியாக அமைந்தது.
நீண்ட நாட்களாக புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில் இருந்ததால், சுனிதா வில்லியம்ஸால் உடனடியாக நடக்க முடியவில்லை. சக்கர நாற்காலியின் உதவியுடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், கேமராக்களை கண்டதும் அவரது முகத்தில் மலர்ந்த புன்னகையும், உற்சாகமாக அவர் காட்டிய thumbs up சைகையும் அவரது மன உறுதியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது. தன்னை மீட்ட வீரர்களுக்கும் அவர் இரு கைகளை உயர்த்தி அன்புடன் Greeting செய்தார். இந்த நெகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.
சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். அவரது இந்த ஒன்பது மாத கால பயணம் உட்பட, இதுவரை அவர் மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார். பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழும் அவர், “மற்றவர்களின் கருத்து உங்கள் மதிப்பை வரையறுக்கவோ அல்லது உங்கள் திறனை கட்டுப்படுத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்களை நீங்கள் நம்புங்கள்” என்ற தனது வார்த்தைகள் மூலம் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறார். அவரது இந்த சாதனைப் பயணம் வருங்கால விண்வெளி வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைவதுடன், பெண் சக்தியின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது.