இனிப்பு உணவுகளை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதுவும் சில இனிப்புகள் தனித்துவமான இடத்தை பிடித்து நம் நாக்கில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட இனிப்புகளில் ஒன்றுதான் ஆற்காடு மக்கன்பேடா. இது வெறும் இனிப்பு மட்டுமல்ல; அது ஒரு கலாச்சார பாரம்பரியம்.
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆற்காடு தனது வரலாறு, கலாச்சாரப் பின்னணிக்கு பிரபலமானது. ஆனால், ஆற்காட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை மக்கன்பேடாவையே சேரும். நவாபுகளின் ஆட்சி காலத்தில் உருவான இந்த இனிப்பு இன்றுவரை தனது அசல் சுவையை இழக்காமல் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்து வருகிறது.
‘மக்கன்’ என்றால் உருது மொழியில் ‘நயம்’ என்றும், ‘பேடா’ என்றால் பாகில் ஊறவைக்கும் ஒருவகை இனிப்பு என்றும் பொருள். அதாவது வாயில் வைத்தவுடன் நயமாக உருகிவிடும் இனிப்பு என்பதே மக்கன் பேடாவின் பொருள். இதற்குள் முந்திரி, திராட்சை, பூசணி விதை, வெள்ளரி விதை போன்ற உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால், ஒவ்வொரு கடிக்கும் ஒரு புதிய சுவை அனுபவம் கிடைக்கும்.
மக்கன்பேடாவின் சிறப்புகள்:
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த இனிப்பு, தனது பாரம்பரியத்தை இன்றும் தக்க வைத்துள்ளது. மைதா மற்றும் சர்க்கரை கலக்காத கோவா, ஏலக்காய் பொடி, சோடா மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படுவதால், இந்த இனிப்பின் சுவை வேறு எந்த இனிப்பிலும் கிடைக்காத தனித்துவமாக இருக்கும்.
உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால், அதன் சுவை உண்மையிலேயே வேற லெவலில் இருக்கும். வாயில் வைத்த உடன் உருகிவிடும் மென்மையான தன்மை, மக்கன்பேடாவை வேறு இனிப்புகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
தயாரிப்பு முறை: மக்கன்பேடாவைத் தயாரிப்பது ஒரு கலை என்றுதான் சொல்ல வேண்டும். மைதா மற்றும் சர்க்கரை கலக்காத கோவாவை சம அளவு எடுத்து, அதில் சோடா மாவு மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து, நெய் ஊற்றி நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். பின்னர், அந்த மாவை ஒரு எலுமிச்சை அளவிற்கு உருண்டையாக உருட்டி, அதற்குள் உலர் பழங்களை பூரணம் போல வைத்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். பின்னர், அந்த உருண்டைகளை சர்க்கரைப்பாகில் ஊற வைத்தால், வேற லெவல் சுவையான மக்கன்பேடா தயார். இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது.
திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா என்றால், ஆற்காட்டுக்கு மக்கன்பேடா இனிப்பு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. இது ஆற்காட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது. ஆற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இனிப்பை அதிகமாக வாங்கிச் செல்வது வழக்கம். நீங்கள் எப்போதாவது ஆற்காடு சென்றால், இந்த இனிப்பை தவறாமல் வாங்கிச் சாப்பிட்டு மகிழுங்கள்.